Monday, January 12, 2009

குழந்தைகளின் சாபங்கள்.

மரணங்கள் அடர்ந்த இந்த வாழ்க்கையில் நம்முடைய மகிழ்ச்சி என்பது நிலையான ஒன்று என்பதில் இருந்து எப்பொழுதோ தனிமை பட்டு விட்டது. வரையறுக்கப்பட்ட கோட்பாடுகள் கொண்ட நிகழ்வுகளில் இருந்து மட்டுமே தொலைந்து போன உவகையையும், பரவசங்களையும் சில மணிநேரங்கள் மட்டுமே பெற்று கொண்டு, மறுபடியும் உணர்ச்சிகள் மழுங்கிய இந்த உலகத்துக்குள் திரும்ப நுழைகிறோம்.

இப்படிப்பட்ட சாபக் கேடாக மாறி கொண்டே இருக்கும் உலகத்துக்கு என்று ஒரு சில வரங்கள் இன்னும் மிச்சம் இருக்கின்றன. இயற்கை அளித்த அவ்வெல்லா வரங்களிலும் மிகச்சிறந்த வரம் எதுவென்றால் நம்மோடு கொஞ்சிக் குலாவி மகிழும் மகிழ்த்தும் குழந்தைகள்.

குழந்தைகள் நமக்கு என்றுமே ஒரு சுவாரசியம் குறையாத கூட்டாளிகள்.நம்முடைய நெருங்கிய காதலி(கள்) அல்லது நண்பர்களிடம் கூட நமக்கு மௌனமான , சோர்வான தருணங்கள் ஏற்பட்டுவிடும். ஒரு நிலைபாடு அற்ற இது தான் செய்ய வேண்டும் அல்லது இதை தான் செய்யும் ,செய்ய போகிறது என்ற வரையறைக்குள் சிக்காமல் இருக்கும் இயல்பே குழந்தைகளை சுவாரசியம் குன்றாதவர்களாக ஆக்கின்றது.

நாம் குழந்தைகளுக்கு வாழ்க்கையை பற்றிய அனைத்து விஷயங்களையும் சொல்லி தர முயல்கிறோம்.ஆனால் நமது குழந்தைகள் வாழ்க்கை என்றால் என்ன என்பதை நமக்கு உணர்த்துகின்றன. குழந்தைகளும், செல்வமுமே வாழ்க்கையின் அலங்காரங்கள் என்கிறது திருக்குர்ஆன்.

அப்படிப்பட்ட குழந்தைகளின் குழந்தைப்பிராயமே அவர்களுக்கு தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்ட அளவில்லாத கொடுப்பினை. அந்த பேரின்பத்தை இன்று சிறிது சிறிதாக உலகமயமாக்கல் மற்றும் அதன் முன்பின் காரணியான நவீனமயமாக்கல் இரண்டும் போட்டி போட்டு திருடி கொண்டு இருக்கின்றன.

குழந்தைகளுக்கு சிறந்த கல்வி முறை எதுவென்றால் அவர்களை அவர்களின் போக்கில் விளையாட விடுவது.ஆனால் இன்றோ விளையாட்டு என்பது kinder garden னில் இருக்கும் playrooms'சுக்குள்ளும் , பள்ளிக்கூட மணி ஒலிக்கும் விளையாட்டு மைதானங்களுக்குள்ளும் அடங்கி விட்டது. அதை தாண்டி வெளியில் விளையாடும் குழந்தைகளை பார்ப்பது ஒரு அபூர்வமான தரிசனம் என்றாகிவிட்டது.

கில்லி, கோலி, கபடி , சீட்டுக்கட்டு செதுக்குறது , ஒளிஞ்சி புடிச்சு , பாண்டி, எறிபந்து , கல்லாமண்ணா, நொண்டி, பம்பரம் வரை எத்தனையோ விளையாட்டுக்களை, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தினம் தினம் நம்முடைய குழந்தைகள் விளையாடி தினம் தோறும் நமது தெருக்களை அலங்கரித்து வந்தது. இன்று எல்லாம் அடங்கி வீட்டுக்கு வந்தவுடன 1 மணி நேரம் ஹோம் வொர்க் , 1 மணி நேரம் டியூஷன் , அப்பொறம் 1 மணி நேரம் கார்ட்டூன், அப்புறம் ஒரு மணி நேரம் play ஸ்டேஷன் அல்லது video Games என்றாகிவிட்டது.

கோலி விளையாட்டினில் மட்டும் மொத்தம் 13 வகையாவிளையாடி இருக்கிறேன். சத்தியமாக எந்த கேம் guide 'அல்லது கேம் tutor' ரோ அருகில் இருந்து சொல்லி தரவில்லை. சில ஏற்கனவே இருந்தன. சில நமது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாமாக உருவாக்கியவன.


குழந்தைகளின் சிருஷ்டிகரத்தன்மை நாம் வாங்கித்தரும் puzzle பாக்ஸ்'சிலோ அல்லது transformer டாய்ஸ்'சிலோ இல்லை.அவர்களுக்கு உண்டான உலகத்தை, அவர்களுக்கு உண்டான விளையாட்டுகளை அவர்களுக்கு பிடித்தமான முறையில் அவர்களின் நண்பர்களோடு அவர்களே மிகச்சிறப்பாக சிருஷ்ட்டித்து கொள்வார்கள். நாம் செய்ய வேண்டியது எல்லாம் அப்படி பட்ட உலகம் உருவாக தடையாக இல்லாமல் இருபதே. அவர்களின் நண்பர்களாக வீடியோ கேம்ஸ்சையும் , கார்ட்டூன்களையும் நாமே தீர்மானித்து அவர்களிடம் திணிக்காமல், தராமல் இருபதே.

இன்று எல்லாக்குழந்தைகளின் மிகப்பெரிய எதிரிகளாக இருப்பது வயதுக்கு மீறிய அறிவும் , அதை போற்றி கொண்டாடும் பெற்றோர்களுமே. வயதுக்கு மீறிய அறிவு ஒரு வரம் அல்ல. சாபம். கள்ளங்கபடமற்ற குழந்தைகள் அந்த தன்மையை வயதின் மூப்பால் இயல்பாக இழக்க வேண்டுமே தவிர, அதையும் அறிவின் பெருமைக்காக அல்ல. இப்படி பட்ட அறிவை வலுக்கட்டாயமாக குழந்தைகளிடம் புகுத்தும் பெற்றோர்கள் சாபக்கேடுகள். அதற்கான சிறப்பான வழிமுறைகள் கணினியும், வீடியோ கேம்ஸ், கார்டூன்ஸ் மற்றும் இவை அனைத்தையுமே தனக்கான உலகம் என்று குழந்தைகளை எண்ண வைக்கும் நேரமற்ற பெற்றோர்கள்.


இன்று குழந்தைகளுக்கு என்று பிரத்தியேகமாக வரும் வீடியோ கேம்ஸ் அறிவோடு சேர்ந்து வயதிற்கு மீறிய வன்முறைக்கான குணாதியசங்களை அழகாக சொல்லித்தருகின்றன. நூறு கேடு கெட்ட ஹீரோயிச மசாலா படங்களைப் பார்த்து நாம் பெற்ற சீரழிவை நான்கு அல்லது ஐந்து வீடியோ கேம்கள் செய்து விடுகின்றன.

உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி இரண்டுமே உருவாக்கம் பெற்று வளரும் இந்த வயதில் , உடல் சார்ந்த விளையாட்டுகளே குழந்தைக்கு இவ்விரண்டையும் அளிக்கின்றன. ஆனால் இன்றோ பள்ளி முடிந்து அபார்ட்மென்ட் சிறைக்குள் புகும் குழந்தை மறுநாள் அதிகாலை தான் அரக்கப்பறக்க அடுத்த நாள் உலகத்தை சில நிமிடங்கள் விழுங்க முடிகின்றது பள்ளி சிறைக்குள் செல்லும் வரை.

தெருக்கள் எல்லாம் இருள் சூழ்ந்து வெறிச்சோடி கிடக்கின்றன டியுஷன்களும் , வீடியோ கேம்களும் கபளீகரம் செய்த குழந்தைகள் இன்றி.இப்படி உருவாக்கம் பெறுகின்ற குழந்தைகளிடம் குழுமனப்பான்மையோ, பொதுவிற்க்காக சிந்தித்தலோ, அன்பு சார்ந்த குணங்களோ மட்டுப்பட்டு போய் வெற்றி சார்ந்த வெறியே மிஞ்சி நிற்கும். அல்லது தோல்வி என்பதை தாங்கிக்கொள்ளும் எந்த மனோபலமும் மிஞ்சாது.

இன்று உலகத்திலேயே மாணவர்கள் அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் நாடுகளில் மிகச்சிறப்பான இடத்தில் இருக்கிறது இந்தியா. இது வரை இந்த தற்கொலை வியாதி மூன்றாம் வகுப்பு குழந்தைகள் வரை முன்னேறி உள்ளது. என்ன கொடுமை பாருங்க..?? இன்னும் கொஞ்ச நாள்ல LKG பெயில்'ன்னு தற்கொலை செஞ்சிட்டங்கன்னு செய்தி வராம இருந்தா சரி.

ஆங்கிலேய அடிமை குமாஸ்தா கல்வி முறை சாபக்கேட்டில் இருந்தே மீள இன்னுமொரு ஐம்பது ஆண்டுகள் எடுக்கும் போலத்தெரிகிறது. இதில் நின்று கொள்ளும் விஷமாக பரவும் இந்த தாய் எட்டடி பாய்ந்தால் குட்டியை நாற்பது அடி பாய வைக்கும் நவீன வியாதிக்கல்விமுறை வேறு. மொத்தமாக ஒரு நூற்றாண்டிற்காண குழந்தைகளை கண் முன்னே பலி கொடுத்து கொண்டு இருக்கிறோம் , புன்னகைத்தவழ.

அவர்களின் சாபங்கள் என்றுமே நமது கல்லறைகளில் , அழிந்து தொலைந்து போன சிரிப்பு சத்தங்கங்களிலான மலைப்பிரசங்கங்களாக ஒலித்து கொண்டிருக்கும்.

ஒரு முறை ஒரு ஜென் துறவியிடம் சென்று தன்னுடைய நான்கு வயசு பிள்ளையின் அட்டகாசம் தாங்க முடியலை, அவன பேசமா உங்க மடத்துல சேர்த்து பெரிய மகானா ஆக்கிருங்கன்னு சொன்னாரு ஒருத்தரு. அதுக்கு அந்த துறவி சரி அதுக்கு முன்னாடி உனக்கும் உன் புள்ளைக்கும் ஒரு சின்ன போட்டி, யாரு தோற்கிறாங்களோ அவுங்க மடத்துல சேர்ந்துட வேண்டியது தான்'ன்னு சொல்லிட்டாரு. நாலு வயசு புள்ளை தான ,அவன ஜெயிக்க முடியாத நம்மால, பய புள்ளைய எப்படியாவது மடத்துல சேர்த்துடனும்னு சரின்னு சொல்லிட்டான் நம்ம ஆளு.

துறவி வந்து அந்த ஆளுகிட்டேயும் அவனோட குழந்தைகிட்டேயும் ஒரு ஆயிரம் மரப்பொம்மையையும், பத்து வர்ண பொட்டியையும் கொடுத்து ஆளுக்கு பாதியா இது எல்லாத்துக்கும் வித விதமான வண்ணம் அடிங்க. யாரு சந்தோசமா, சீக்கிரமா செய்யிறீங்களோ அவுங்க வீட்டுக்கு போலாம் தோத்தவுங்க மடத்துல சேர்ந்துடுங்க 'ன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.

குழந்தை ரொம்ப நேரம் அந்த பொம்மைகளோட விளையாடுச்சி.அப்பொறம் வண்ணங்களோட விளையாடுச்சி.அப்பொறம் கைல வண்ணத்த அள்ளி சரசரன்னு அதுக்கு பிடிச்ச மாதிரி எல்லாம் பொம்மைகள் மேல பூச ஆரம்பிச்சுருச்சி. மணிநேரத்துல வேலைய முடிச்சிட்டு துறவிகிட்ட போய் இன்னும் கொஞ்சம் பொம்மை வேணும்னு கேட்க ஆரம்பிச்சுருச்சி .

நம்ம ஆளு அங்க உள்ள உட்கார்ந்து என்ன இப்படி ஆகிப் போச்சு நம்ம நிலைமை'ன்னு பொலம்பிகிட்டே வண்ணத்த தூரிகைன்னால எடுத்து எடுத்து பூசிட்டு இருந்தான்.

சாமி வந்து அவன்ட்ட ரெண்டு காவித்துணிய கொடுத்து நீ போய் மடத்து வேலைகள கவனிக்க ஆரம்பின்னாரு .

அவர்களின் போக்கில் அவர்களை விட்டு குழந்தைகளிடம் தான் நாம் புதிய சிந்தனைகளை கற்க முடியும், என்பதற்கு சொல்லப்படும் ஜென் கதை இது .

No comments:

 

| இங்கிலீஷ்'ல |