Friday, January 2, 2009

சூபியிசமும் முல்லாவும்.


சூபியிசம் என்றல் என்ன ? அப்படின்னு ஒரு சூபியிடம் கேட்டாராம், ஒரு சீடர். அதற்க்கு அந்த சூபி சொன்ன பதில் "காஞ்ச சாணி ".

உலகத்தையும் ,அதன் நடைமுறைகளையும் இடது காலால் எட்டி உதைத்தவாறு உண்மை பற்றிய அறிதலை ,அதற்க்குண்டான தேடல் உடையவர்களுக்கு மிக மிக நிதானமாக, மண்டை காஞ்சு போற அளவுக்கு இல்லாமல் ஒரு வித கேலியுடனும் நகைச்சுவையுடனும் புரிய வைப்பது தான் சூபி ஞானிகளின் குறிக்கோளாக இருக்கிறது. 

குழந்தைகளின் கேளிக்கை மனோபாவத்துடனேயே சூபிக்களின் வாழ்நாள் முழுதும் கழிகிறது.அவர்களுக்கு ஒரு நாளும் சோம்பல் கிடையாது, வாழ்க்கை சலிப்படைவதும் கிடையாது.ஒவ்வொவொரு நாளும் புது புது விளையாட்டுக்கள்.முட்டாள்களை போன்ற கேள்விகளின்,செயல்களின் மூலம் ஆழ்ந்த சிந்தனையை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். 

தமிழ் நாட்டின் பல ஊர்களில், பல மஸ்த்தான் சாகிபுகளின் தர்காக்களை காணலாம். கொஞ்சம் அவர்களின் கதையை கேட்டால் அவர்களின் பல்வேறு செயல்கள், குழந்தைகளை போன்று அல்லது மன நிலை தடுமாறியவர்கள் என்று நம்மால் சொல்லப்படுபவர்களை போன்றோ இருக்கும்.மொத்தத்தில் சாதரண தன்மையில் இருந்து சற்றே நகர்ந்த செயல்பாடு உடையவர்களாவே இருக்கின்றாகள். என்றாலும் உலகை தன்னுடைய கேலித்தனமான செய்கைகளால் ஒவ்வொரு நாளும் சிந்திக்க வைத்து கொண்டே இருக்கிறார்கள் . எல்லா சூபிக்களும் ஞானிகளும் இப்படி வாழ்ந்தார்களா என்றால் இல்லை .... மிக குறைவானவர்களே இப்படி இருந்திருக்கிறார்கள். 

அவர்களுள் இன்று உலகம் முழுவதும்,நிறைய உள்ளர்த்தங்கள் பொதிந்த தன்னுடைய தற்குறித்தனமான வேடிக்கை நிகழ்வுகளால் என்றென்றும் அழியாப்புகழ் பெற்றவர் முல்லா நஸ்ருத்தீன். திருவள்ளுவரை போலவே முல்லா நஸ்ருத்தீனும் ஒருவர் அல்ல. அது ஒரு குறிப்பெயரே என்று நிறைய ஆராய்ச்சிகள் ஒரு புறம். நஸ்ருத்தீன் எங்க ஊர்காரர்தான்னு சண்டைக்கு வருகிற துருக்கி, அராபிய, பஞ்சாபிய, அல்பேனிய, ஈரானிய மக்கள் ஒரு புறம் இருக்கட்டும். 

நமக்கு தேவை கண்ணாடி குவளை அல்ல, உள்ளிருக்கும் திராட்ச்சை ரசம்.



ஒரு நல்ல பட்டப்பகல் வேளையில் முல்லா நஸ்ருத்தீன் அவர் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து இருந்தார்.அப்பொழுது அங்கு வந்த ஒரு நாட்டுப்புறவாசி தன்னுடைய கையில் இருந்த ஒரு கடிதத்தை முல்லாவிடம் கொடுத்து , முல்லா இதை கொஞ்சம் படிச்சு விளக்குங்கன்னாரு. முல்லா கொஞ்சம் நேரம் அந்த கடிதத்தையே பார்த்து கொண்டிருந்து விட்டு ,அதை அப்படியே அவர்ட்ட திருப்பி கொடுத்து," அய்யா எனக்கு எழுத படிக்க வரதுன்னார்"..அதுக்கு அந்த நாட்டு புறத்து ஆளு, "என்னங்க ! பார்க்க பெரிய அறிவாளி மாதிரி தலைபாகை எல்லாம் பெருசா கட்டி இருக்கீங்க, படிக்க தெரியாதுன்னு சொல்றீங்களே!'ன்னார் . உடனே முல்லா ,வீராப்பா தலைப்பாகைய கழட்டி அந்தாளுக்கு மாட்டி விட்டு ,இந்த இப்போ நீயும் தான் தலைப்பாகை கட்டி இருக்க , உனக்கு அது படிக்க சொல்லி கொடுத்தா நீயே கடிதத்த படிச்சிகோ'ன்னுட்டு விறுவிறுன்னு வீட்டுக்குள்ள போய்ட்டார்.

நல்ல பனி பொழியுற அர்த்தராத்திரில கும்மிருட்டுல, முல்லா வெளியூர்ல 
இருந்து வீட்டுக்கு நடந்து வந்துட்டு இருந்தாரு. அப்போ அவர பார்த்தா ஒரு தெரு நாயி வள்ளு! வள்ளுன்னு குரைக்க ஆரம்பிச்சது. உடனே முல்லா கீழா குனிஞ்சு அங்க கடந்த ஒரு கல்ல எடுக்க முயற்ச்சி பண்ணினாரு. என்ன கொடுமையோ , கல்லு ரோட்டோட ஓட்டிகிட்டு வரவே இல்லை. முல்லா உடனே, சே! என்ன உலகம்டா இது ! நாய அவுத்து விட்டுறானுங்க , கல்ல கட்டி போட்டுருறானுங்க 'ன்னு புலம்பிட்டே நடக்க ஆரம்பிச்சுட்டார்.

முல்லா அவர் வாழ்நாள் முழுவதும் மிக கடுமையான வறுமையில இருந்தார்.ஒரு நாள் அவரோட அழுக்கு சட்டை, கிழிஞ்ச மேலங்கிய போட்டுட்டு சந்தைக்கு போனாரு எதுனா வேலை கிடைக்குதான்னு தேட.அங்க பார்த்தா ஒருத்தன் பட்டு சட்டை,தங்க பொத்தான்கள் வைச்ச வெல்வெட்டு கோட், சரிகை வேலைப்பாடு செஞ்ச செருப்புன்னு போட்டு ரொம்ப ஜோரா நடந்து வந்து கடைக்காரங்ககிட்ட எல்லாம் பேரமே பேசாமா அப்படியே எல்லாம் சாமானையும் சொல்ற விலைக்கு வாங்கிட்டு இருந்தான். முல்லா ஒரு கடைக்காரர்ட்ட "யாருங்க இந்தாளு? 'ன்னு கேட்க, அவரு இவரு தான்பா "பெமி பாஷாவுடைய வேலைக்காரறு'ன்னு சொன்னாரு ". உடனே முல்லா "இறைவா! என்ன கொடுமை இது, பெமி பாஷாவோட வேலைக்காரன் எப்படி இருக்கான், உன்னுடைய வேலைக்காரன் நான் எப்படி இருக்கேன்"ன்னு சொல்லிட்டு போய்ட்டே இருந்தார்.

நல்ல வாடை காத்து அடிக்குற ஒரு ராத்திரி முல்லா சுகமா வீட்டுக்குள்ள தூங்கிட்டு இருந்தாரு.திடீர்னு வெளிய தெருவுல கூச்சல், குழப்பம் சத்தத்த கேட்டு ஒரு கம்பளிய எடுத்து மூடிகிட்டு வெளிய வந்தார்.பார்த்தா அங்கே யாரையும் காணோம்.என்னடா இதுன்னு, கொஞ்சம் தெருவுல அந்த பக்கம் போய் பார்க்கலாம்னு நடந்தார்.அப்போ அந்த பக்கம் வந்த ஒரு பலே திருடன் டக்குனு, அந்த கம்பளி போர்வைய உருவிட்டு ஓடிட்டான். திரு திரு'ன்னு முழிச்சிட்டே "அட கர்மமே ! இவ்வளவு கூச்சலும் குழப்பமும் என் போர்வைக்கு தானான்னு " நடுங்கிட்டே வீட்டுக்குள்ள போய்ட்டாரு முல்லா.


ஒரு நாள் நதிக்கரை ஓரமா உட்கார்ந்து இருந்தார் முல்லா.அப்போ அவரோட நண்பர் ஒருத்தர் எதிர்பக்க கரைல நின்னுட்டு, முல்லா, நான் எப்படி அந்த பக்கமா வரதுன்னு ?கத்தினாரு. பதிலுக்கு முல்லா அமைதியா, நீ அந்த பக்கமா தான் இருக்கேன்னு சொல்லிட்டு எழுந்து போய்ட்டார்.

நிறைய திராட்சை பழக்குலைகளை கையில கொண்டு வந்துட்டு இருந்தாரு முல்லா.அப்போ அங்க வந்த குழந்தைகள் கிட்ட ஒரு குலைல இருந்த பழங்கள மட்டும் பிச்சுபிச்சு கொடுத்துட்டு போக போனாரு, அப்போ ஒரு குழந்தை, ஏன் முல்லா !அதான் அவ்வளவு பழம் இருக்கே, இன்னும் நிறையா எங்களுக்கு கொடுக்கலாம்ல'ன்னு கேக்க முல்லா ,"முழு குலைய தின்னாலும் சரி ஒரு பழத்த தின்னாலும் சரி, ருசி ஒன்னுதான்னு" சொல்லிட்டே கழுதை மேல ஏறி கிளம்பிட்டாரு.



இப்படி நிறைய கதைகள் சொல்லிட்டே போகலாம். சாதரண மக்களிடம் மட்டும் அல்லாமல், பேரரசர்களிடமும் எந்த பயமும் அன்றி அதே பாமரத்தானமான கேள்விகள்-செயல்களின் மூலம் பல்வேறு சிந்தனைகளை ஏற்படுத்தியவர் முல்லா.

ஒரு முறை ஓட்டோமான் பேரரசை வென்ற மங்கோலியத்தலைவன் தைமூர் முல்லாவிடம், "நான் யார் ? என்னுடைய மதிப்பு என்னன்னு தெரியுமான்னு ?" கேட்டான்.அதுக்கு முல்லா "ஒ! தெரியுமே ! 200 வெள்ளி'ன்னாரு. பயங்கர கோபமான தைமூர் "முட்டாளே! நான் போட்டுயிருக்கும் இந்த இடுப்புவார் மட்டுமே 200 வெள்ளி இருக்கும்" சொன்னான். உடனே முல்லா , ஆமா தைமூர், அதேயும் சேர்த்து தான் சொல்றேன்னு நடைய கட்டிட்டாரு.

முல்லா இருந்த அந்த ஊரு ராஜாவுக்கு எப்படியாவது முல்லாவ மட்டம் தட்டணும்னு ஆசை .சரின்னு ஒரு நாள் முல்லாவ தன்னுடையா சபைக்கு வர சொல்லி, முல்லா !இன்னைக்கு உங்களுக்கு ஒரு பட்டம் தர போறேன், என்னன்னா இன்னைல இருந்து நீங்க தான் இந்த ஊரு கழுதைகளின் ராஜா 'ன்னு சொன்னாரு.உடனே முல்லா ரொம்ப சந்தோசங்க'ன்னு சொல்லிட்டு அங்க இருந்த ஒரு வேலைக்காரன்ட்ட ராஜாவோட இருக்கைய விட ஒரு உயரமான இருக்கையா போட சொல்லி ராஜா பக்கத்துலேயே உட்கர்ந்துட்டார். செம கோபமான ராஜா, என்ன முல்லா ,திமிரா ? என்ன தைரியம் இருந்த என் பக்கத்துலேயே உட்காருவன்னு , கத்தினாரு. முல்லா பொறுமையா ,ஹா! அமைதி ! இப்போ நான் உனக்கு ராசாவ இல்லை நீ எனக்கு ராசாவான்னு புன்சிரிப்போடு கேட்டாரு.

இப்படி வாழ்நாள் முழுக்க தன்னுடைய ஏடாகூடமான செயல்களால் மக்களை சிந்திக்க வைத்த முல்லா ஒரு முறை தான் அழுதுயிருக்கிறார்.அது கூட அவரோட கழுதை செத்ததுக்கு. என்ன முல்லா உங்க பொண்டாட்டி செத்ததுக்கு கூட அழுகலியே நீங்க ஏன் இந்த கழுத செத்ததுக்கு போய் அழுவுரீங்கன்னு கேட்டதுக்கு ..என் பொண்டாட்டி செத்தப்போ எல்லாரும் கவலைப்படாதே, இத விட நல்ல பொண்ணா பார்த்து உனக்கு அடுத்ததா கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு சொன்னங்கா ஆனா என் கழுதை செத்தப்போ அப்படி யாரும் சொல்லலியே'ன்னு அழுதாராம்.

முல்லா அல்பேனிய, துருக்கிய மக்களால் ஹோஜா (கண்ணியம் மிக்க ஆசிரியர் ) என்று அன்போடு நினைவு கூறப்படுகிறார்.இன்று எத்தனையோ வேறு முல்லாக்கள் வேறு பல காரணங்களால் அறியப்பட்டாலும் எனக்கும் முல்லா என்றவுடன் நினைவுக்கு வருபவர் ஹோஜா அவர்கள் மட்டுமே.

இவருடைய பிறப்பு, வாழ்க்கை, இறப்பு எல்லாமே ஒரு நாடோடியை போன்றே உள்ளது சரியான விவரங்கள் இல்லை. அவருடைய கல்லறை இருப்பதாக சொல்லப்படும் கொன்யாவில் அவருடைய கல்லறை மிக பெரிய கதவுகளால் மூடப்பட்டு இருக்கிறது 
..கதவுகளில் பொறிக்கப்பட்ட வாசகம் 

" சில நேரம் மிகப்பெரிய கதவுகளை கடந்து செல்ல திறவுகோள்கள் தேவைப்படுவதில்லை. தேவைப்படுவது எல்லாம் கதவுகளை சுற்றி ஒரு சிறு நடை தான். ஏன் என்றால் இந்த கதவுகள் எந்த சுவர்களையும் மூடுவது கிடையாது. "


ஆம் உண்மையிலேயே சுவர்கள் அற்ற கதவுகள் தான் சூபிஞானம்


மேலும் முல்லா கதைகள்

11 comments:

நாமக்கல் சிபி said...

நல்ல பதிவு!

அருமை!

Raji said...

really superb!

கபீஷ் said...

அருமையான பதிவு!

RAMASUBRAMANIA SHARMA said...

EXCELLENT ARTICLE....VERY INTRESTING....KEEP WRITING ABOUT "MULLA" STORIES...

RAMASUBRAMANIA SHARMA said...

SSSSS.....

Wandering Dervish said...

நாமக்கல் சிபி, ராஜி ,கபீஷ், ராமசுப்ரமணிய ஷர்மா நன்றி.
இன்னும் எழுத முயற்சிக்கின்றேன்

Anonymous said...

Nausadh ali,

To know the islam - read al quran and follow prophet mohamed (pbuh) ,

this type of story will make a humour and there is no way to follow,

As for those who fear their Lord unseen, for them is Forgiveness and a great Reward Al-Quran 67:12
Nothing will happen to us except what ALLAH has decreed for us: He is our protector: and on ALLAH let the Believers put their trust. Al-Quran 9:51

M.Rishan Shareef said...

அன்பின் நாடோடி,

இப்பதிவினைப் பார்க்கவும்... :)
//http://blogintamil.blogspot.com/2009/01/blog-post_6945.html

உங்கள் சேவை தொடரட்டும் நண்பரே !

ரவி said...

சூப்பர் !!!!!!

அற்புதமான ரைட்டப்...!!!! பதிவு போட்டால் தெரிவிக்கவும்...

சூடான இடுகை கந்தாயங்களால் மிஸ் பண்ணிடாதமாதிரி எதாவது பீட் பர்னர் மாதிரி இமெயில் சப்ஸ்க்ரிப்ஷன் டூல்பார் வைக்கவும்...

இந்த மாதிரி நல்ல பதிவுகள் சில சமயம் கண்ணுல தட்டுப்படாமலே பூடுது

Wandering Dervish said...

அன்பின் அனானி நான் எழுதிய பதிவு சூபியிசத்தை பற்றி. இஸ்லாம் பற்றி அல்ல.
சூபியாக்களுக்கு எந்த மதமும் சொந்த மதம் கிடையாது.அவர்களின் அடிபொடிகளான எங்களுக்கும்.

ரிஷான் ஷெரீப் , நன்றி தங்களின் பெருந்தன்மைக்கும், வாழ்த்திற்கும்.

செந்தழல் (பாரதி தான் நினைவுக்கு வாரான் ) , தங்களின் பாராட்டிற்கு நன்றி. நம்ம பதிவ படிக்கிறதே நாம மட்டும் தான், அதுவும் பதிவு எழுதினா மட்டும் தான்ன்னு அதெல்லாம் வைக்கலை.தலை, மொதல்ல கொஞ்சம் எதுனா உருப்படியா எழுதுறேன். அப்பொறம் மிச்ச சொச்சத்த பார்போம்.

Anonymous said...

அந்த கடைசி வாசகம் 100% உண்மை . அருமையான தொகுப்பு . நன்றி .

 

| இங்கிலீஷ்'ல |