Thursday, August 28, 2008

வேதாளமாய் எழும் வார்த்தைகள்முட்டி எழுகின்றன வார்த்தைகள் !
வெறும் தடமின்றி,
உறையும் இடமின்றி,
கரைந்து செல்கின்றன
சில !
தயங்கி நின்ற பொழுதுகளின்
தொண்டைக்குழி இடுக்குகளில்,
சிக்கி திணறிய
வார்த்தைகள், சில வலிகளாய்!
நில்லென, மலிந்து கெஞ்சுகின்றது
என் மூளை !
எனினும்
ஒன்று, இரண்டு, மூன்றென
நில்லாத அடுக்குகளாய்
மனமெங்கும் வார்த்தைகள்!
தூள்தூளாக்கி செல்கின்றன
பெரும் காற்றாய்
சில வார்த்தைகள் !
இனிய தருணமாக்கி,
சுகம் தரக் கூடுமென,
பொத்தி வைத்த சில வார்த்தைகள்
மட்டுமே ஒளிந்து
நிற்க்கின்றன,
என் மன பெருவெளியில் !

Wednesday, August 20, 2008

பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் - சீனா தேசிய விளையாட்டு போட்டிகள்னு பெயர் மாற்றம்.

பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் - சீனாவுக்கு வரவு , நமக்கோ தாறு மாறு செலவு - 2
ஒலிம்பிக்ஸ்ச, சீனா தேசிய விளையாட்டு போட்டிகள்னு பேரு மாத்துற அளவுக்கு சீனா போற போக்குல ஆக்கிரும் போல இருக்கு... எந்த போட்டியில பார்த்தாலும் சீனாக்காரனுங்க தான் கோல்ட் மேடல்ல வாங்கிட்டு போயிட்டு இருக்கானுங்க. சில நேரம் ஒரே போட்டியில ரெண்டு மெடல் கூட வாங்குறானுங்க இப்போ எல்லாம் டிவில ஒலிம்பிக்ஸ் பார்க்கிற ஆர்வமே இல்லை.அட என்னப்பா! வழக்கம் போல சீனா தான் கோல்ட் மெடல் வாங்கி இருக்கும்ன்னு ப்ரீயா விட்டுறேன் .

இப்படி இருக்குற எல்லாப் பதக்கத்தையும் வாங்கிட்டு , மத்த நாடுகள எல்லாம் தாளிச்சிட்டு இருக்குற சீனாவோட நிலைமை, ஒரு காலத்துல உலக விளையாட்டு அரங்குல இப்போ இருக்குற இந்தியாவோட நிலைமைய விட கேவலமா இருந்துச்சு.

1932 லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்ஸ்ல சீனா சார்பா கலந்துகிட்டவங்க எத்தன பேரு தெரியுமா ?? 1 ..ஒரே ஒருத்தருபா .லியு சாங்க்சுன் (Liu Changchun) இவரு கூட ஒரு மெடல் கூட ஜெயிக்கலை.அப்போ இருந்து 1949 ல முழுமையான சீனா குடி அரசு உருவாக்கப்பட்டு, 32 வருஷம் கழிச்சு பெண்கள் வாலிபால் போட்டியில 1981 வருஷம் உலக கோப்பைய வென்றது தான் சீனா மொதமொதல்ல உலக விளையாட்டு அரங்குல பதிச்ச முதல் தடம்.


1984 வருஷம் மறுபடியும் லாஸ் ஏஞ்செல்ஸ்ல ஒலிம்பிக்ஸ் நடக்குது.
சீனா ஜிம்னாஸ்டிக் வீரர் லீ நிங்க் (Li Ning) 3 தங்க பதக்கத்த அள்ளிட்டு போறாரு.
அப்போ ஆரம்பிக்குது ஒலிம்பிக்ஸ்ல சீனாவோட சுக்கிர திசை. அன்னில இருந்து இன்னைக்கு வரைக்கும் உலக அரங்குல விளையாட்டு போட்டிகள்ள சாதனைகள் படைத்த சீன விளையாட்டு வீரர்களோட எண்ணிக்கை 1000'த்த தாண்டும்

எப்படி இந்த ராட்சச வளர்ச்சி இந்த 24 ஆண்டுகள்ல ? விளையாட்டு வீரர்களோட கடுமையான உழைப்பு, மக்களோட அரசோட உற்சாகம் ஒத்துழைப்பு எல்லாத்துக்கும் மேல அக்கறை .விளையாட்டு மேலயும் ,விளையாட்டு போட்டிகள் மேலேயும் சீன அரசு காட்டுற அக்கறை.

ஒவ்வொரு சீன மாநிலத்திலேயும் குறைஞ்சது ஒரு 5 -7 விளையாட்டு பல்கலைக்கழகங்களாவது இருக்கும்.நம்ம ஊர்ல இருக்கிற Y.M.C.A , இந்த சொச்சமிச்ச பல்கலைக்கழகங்களோட ஸ்போர்ட்ஸ் டிபார்ட்மென்ட் மாதிரி ஏதோ கடமைக்கு இருக்கிற வெத்து வேட்டுங்க கிடையாது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்துலேயும் குறைஞ்சது 1000 பேராவது படிப்பாங்க. அமெரிக்கா மற்றும் ஐரோப்பால இயங்குகிற விளையாட்டு சிறப்பு பயிற்சி நிறுவனங்கள் , பல்கலைக்கழகங்களுக்கு சமமான வசதியோட இயங்குற நிறுவனங்கள் இவை.. நம்ம ஊர்ல ஒரு IIT'ல டெக்னாலஜி சம்பந்தமா எவ்வளவு வசதி இருக்குமோ அவ்வளவு வசதி விளையாட்டு சம்பந்தமான இந்த பல்கலைக்கழகங்கள்ள இருக்கும்.

இதுல இருக்குற கல்லூரிகள்ல ஒவ்வொரு விளையாட்டு துறைலேயும் ஒரு 50 பேராவது படிப்பானுங்க.படிப்போட 2வது வருட முடிவுல எந்த விளையாட்டுல ஸ்பெஷல் ட்ரைனிங் எடுக்க விரும்புறாங்களோ அந்த விளையாட்ட தேர்ந்து எடுத்து அடுத்த 2வருடம் கடுமையான பயிற்சி மற்றும் அதன் தொழில் நுட்பங்கள், நுணுக்கங்கள் எல்லாம் கத்து கொடுக்க படும்.இதுல இருந்து தான் மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள் தேர்ந்து எடுக்கப்படுவங்க. இது தவிர்த்து அரசு சார்ந்த விளையாட்டு பயிற்சி நிறுவனங்கள் இருக்கு. அதுலேயும் படிக்கலாம், ஆனா இது கொஞ்சம் மோசம்ப்பா. கிட்டத்தட்ட 3-4 வருஷம் ஒரே விளையாட்ட அக்கு வேற ஆணி வேற கழட்டி சம்பந்தப்பட்டவங்களுக்கு பேச்சு மூச்சாவே இத மாத்திடுவாங்க.

இது எல்லாத்துக்கும் மேல சீனர்களுக்கு தேச பற்று தேச பெருமை எல்லாம் மத்த நாட்டுகாரனுங்கள விட ஒரு 29 மடங்கு ஜாஸ்தி... ஏதாவது தன்னோட நாட்டுக்கு செய்யனும்னு மூட்டை தூக்குறவன்ல இருந்து கஞ்சா அடிக்குற பார்ட்டி வரைக்கும் எல்லாம் ஒரு முடிவோட இருப்பானுங்க .கடுமையான பயிற்சி, விளையாட்டு பற்றிய அறிவு, போதாத குறைக்கு வெறி ஏத்த தேச பற்று- இன பற்று இதெல்லாம் இருக்குற ஆளுங்க அப்புறம் தங்க பதக்கங்கள அள்ளிட்டு போகாம என்ன பண்ணுவானுங்கே ?

இப்படி வாழ்கையே விளையாட்டுக்குனு இருக்கற பசங்க, பொண்ணுங்களுக்கு,சீன அரசும் ஒரு விதத்துலேயும் குறைஞ்சது கிடையாது.விளையாட்டு வீரர்களோட வாழ்க்கையே இந்த விளையாட்ட நம்பி தான் இருக்கு, அவுங்களுக்கு தன்னோட குடும்பம் அதுக்கு சோறு போட வேண்டிய கவலை இல்லாம இருக்கனும் , அப்போ தான் முழுமனசா விளையாட முடியும்னு உணர்ந்து இதை எல்லாம் கவனிச்சுக்கும். மேலும் அவனுடைய பயிற்சிக்கு வேண்டிய சகல வசதிகள் எல்லாத்தேயும் செஞ்சு கொடுக்குது ..நம்ம ஊரப் (கிரிக்கெட்ட தவிர ) போல ஒவ்வொரு விளையாட்டு வீரனும் வெளிநாடு போயி போட்டிகள்ள பங்கேற்க ஸ்பான்சர்ருக்கு நாயாபேயா அலைய வேண்டிய நிலைமை இல்லை. அரசே இதெல்லாம் பார்த்துக்கும் .

இங்க வர டிவி விளம்பரங்கள்ல நடிகனுங்க மட்டும்மில்ல, கூடைப்பந்து ,பாட்மிண்டன், ஓட்டப்பந்தயம், வாலிபால்,வெயிட் லிப்டிங் இப்படி எல்லா விளையாட்டுலேயும் முன்னணில இருக்குற விளையாட்டு வீரர்கள்ள பார்க்கலாம்.

அப்புறம் சொல்ல மறந்துட்டேனே
ஒலிம்பிக்ஸ்ல மெடல் வாங்கின மக்களுக்கு சீன அரசு கொடுக்குற பரிசுகள்

தங்கப்பதக்கம் - 500 மில்லியன் க்வாய் , வீடு தோட்டந்துரவு , இத்யாதி...
இது தவிர்த்து ஸ்பான்சர் கம்பனிகள், விளம்பரதாரர்கள் தர்ற காசு வேற.

வெள்ளிப்பதக்கம் - 100 மில்லியன் க்வாய், சின்ன வீடு (small house' ங்க ) சின்ன தோட்டம், விளம்பர வருமானம், இத்யாதி, இத்யாதி.....

வெண்கலப்பதக்கம் - 25-50 மில்லியன் க்வாய் (சாதனைகளை பொறுத்து)
மேல சொன்ன எல்லாம் கொஞ்சம் கம்மியா.

(குழு போட்டிகளா இருந்தா அரசாங்க பரிச மட்டும் சரி சமமா பங்கு பிரிச்சு கொடுத்துடுவாங்க).

போதாதுன்னு இந்த வீரர்களுக்கு அரசாங்க வேலை,அவுங்க அடுத்த அடுத்த ஒலிம்பிக், உலகப்போட்டிகள்ள இன்னும் சிறப்பா பங்கேற்க வசதி- பயிற்சி,
இல்ல போதும் நாங்க போட்டிகள்ள பங்கேற்கிரதுலயிருந்து ஓய்வு பெறுறோம்ன்னு சொன்னா, அவுங்க சம்பத்தப்பட்ட விளையாட்டு துறைலியே சிறப்பு ஆலோசகர்களா அல்லது பயிற்சியாளர்களா வேலை.

எல்லாத்துக்கும் மேல மக்கள் அவுங்கள ஒரு ICON னா ஆக்கிறாங்க.

இப்போ 110 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்துல கால் தசை பிடிப்பு காரணமா ஆரம்பத்துலியே ஓடாம நின்னுட்ட லியு ஷியாங்( Liu Xiang) க்கு ஒட்டு மொத்த சீனாவும் கண்ண துடைச்சி விட்டு ஆதரவு சொல்லிட்டு இருக்கு. அவரும் அடுத்த ஒலிம்பிக்ஸ்ல சீனாவுக்கு கட்டாயம் தங்கப்பதக்கம் வாங்கி கொடுப்பேன்னு தீவிரமான பயிற்சியில இறங்கிட்டாரு.


நம்ம ஊரா இருந்தா இந்நேரம் , 'கொடும்பாவி கொளுத்தி, வீட்டு மேல கல்லடிச்சு, டிவி-பத்திரிக்கைக்காரனுங்க எல்லாம் ரசிகர்களை ஏமாற்றிய துரோகி 'அது இதுன்னு நல்லா ஏத்தி விட்டு நாலு காசு பார்த்துருப்பானுங்க .


இப்போ சொல்லுங்க மக்களே ஏன் சீனாக்காரனுங்க கோல்ட் மெடலா அள்ளிகிட்டு போக மாட்டனுங்க???நன்றி :
சீனா டெய்லி
கூகிள்
க்வாய் - சீன கரன்சி ரெமின்பியின் (renminbi) உள்ளூர் பெயர்

1.00 United States Dollars = 6.86399 China Yuan Renminbi

Friday, August 15, 2008

பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் - சீனா செய்யாத மோசடிகள்


பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் - சீனாவுக்கு வரவு , நமக்கோ தாறு மாறு செலவு - 2 இல்லை இந்த பதிவு ,அதுக்கு பதிலா


சீன அரசு ஒலிம்பிக்ஸ்'க்காக இங்க ஊருக்குள்ள செய்யுற ராவடிகள
ப்பத்தி எழுதுறதுக்கு முன்னாடி , 'ஒலிம்பிக்ஸ் ஆரம்ப விழால சீன அரசு செஞ்ச மோசடிகள்'- அப்படி இப்படின்னு ஏதோ உலகமகா கொடுமை நடந்த மாதிரி இந்த மேற்க்கத்திய மீடியாக்கள் தான் மக்கள்கிட்ட பொய் பிரச்சாரம் பண்ணிட்டு இருக்குன்னா, நம்ம செட்லயும் பல பேரு அதே கேள்விய கேக்குறாங்கே

அவுங்களுக்கு

முக அழகு சரியா இல்லைன்னு யாங் பெய்யி(Yang Peiyi) 'ங்குற 7 வயசு பொண்ணுக்கு பதிலா ரொம்ப அழகா இருக்குற லின் மியோகே'(Lin மியோகே)ங்குற 9 வயசு பொண்ண பாட வச்சுட்டானுங்க இந்த கொடுமைக்காரப் பாவிங்க !!! பாவம் !அந்த பச்ச புள்ள மனசு எவ்வளோ பாடு பட்டுருக்கும் ! ஊரையே ஏமாத்திட்டாங்க , அது இதுண்ணு சொல்றவங்களுக்கு

உண்மை என்னன்னா ? யாங் பெய்யியோட முகம் நிராகரிக்கப்படல , மாறாக லின் மியோகோவோட குரல் தான் நிராகரிக்கப்பட்டது... சீனா ஒலிம்பிக்ஸ்'க்காக கடந்த 7 வருசமா ஏற்பாடுகள் பண்ணிட்டு வரது, உலகமே அறிஞ்ச ரகசியம்..அந்த ஏற்பாடுகள்ள ஒன்னு தான் துவக்க விழா நிகழ்ச்சிகள்ள பங்கேற்க்கிற குழந்தைகள தேர்ந்து எடுக்குறது..அதுல ஆடுற, பாடுற குழந்தைகள், கொடி பிடிச்சிட்டு வர்ற குழந்தை, சும்மா வந்துட்டு போறவங்க இப்படி எல்லாரேயும் நாட்டோட பல மூளைகள்ள இருந்து தேர்ந்து எடுத்துட்டு இருந்தாங்க. கலை நிகழ்சிகள்ள ஒரு பகுதியா சீனாவின் மிக பிரபல்யமான பியானிஸ்ட்(pianist) லங் லங்கோட (லங் லங்) சேர்ந்து பியானோ வாசிச்ச லி முஜி (Li Muzi) பாப்பாவும் அதுல ஒன்னு. எல்லா நிகழ்ச்சி பகுதிகள்ளேயும் எந்த குழப்பமும் இல்லாம தேர்வு நடந்துச்சு
கடைசில Ode to the Motherland'ர சீனா தேசப்பக்தி பாடல பாடுற குழந்தைய தேர்ந்து எடுக்குறதுல தான் வந்தது குழப்பமே,அந்த ரெண்டு குழந்தைகளுமே ரொம்ப நல்ல பாட, ஒருத்தர தான் தேர்ந்து எடுக்க முடியும்னு நிலைமை வர, குழந்தைங்க மனசு புண்பட கூடாதுன்னு ரெண்டு பேர்ல ஒருத்தர பாடுற மாதிரி நடிக்க வச்சு, ஒருத்தர பின்னாடி டப்பிங் கொடுக்க வச்சு சரி கட்டிட்டாங்க. அடுத்த நாளே இதை சீன அரசு மக்களுக்கு தொலைக்காட்சி (CCTV) மூலாமா தெரிவிச்சுருச்சு ..உண்மைல இப்போ ரெண்டு குழந்தைகளும் ரொம்ப சந்தோசமா சீன தொலைக்காட்சிகள்ள நிறைய பேட்டிகள் கொடுத்துட்டு இருக்காங்க.

ஒலிம்பிக்ஸ்'லியே என்னமோ இப்போ தான் இப்படி டப்பிங் கொடுத்துட்டாங்கோன்னு நீங்க கூவினா சார் ரொம்ப காலமா அது நடக்குது . சமீபத்துல 2006 குளிர்கால ஒலிம்பிக்ஸ்ல இத மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்க

அப்பொறம் அந்த பட்டாசு கொளுத்தி போட்ட விஷயம் ..

மொதல்ல அது தியனன்மென் வாயில்லே (Tiananmen Gate - Not Square ) இருந்து பறவை கூடு விளையாட்டு அரங்கத்துக்கு (bird's nest stadium ) வரலை...வந்தது யோங்க்டிங்க்மேன் கேட்'ல (Yongdingmen Gate) இருந்து. அது மட்டுமில்லை ,அங்க மட்டும் இல்லாம பெய்ஜிங் நகர சுத்தி இந்த மாதிரி ராட்சச பாத சுவடுகள் நகற்ற மாதிரி செஞ்சு இருந்தாங்க ..அதுல யோங்க்டிங்க்மேன் கேட்'ல இருந்து பறவை கூடு விளையாட்டு அரங்கத்துக்கு வர்ற மாதிரி ஏற்பாடு செஞ்ச 29 பாத சுவடுகள்ள 28'அ கொளுத்தி விடாம ஒன்னே ஒன்ன மட்டும் கொளுத்தினாங்க. ஏன்ன்னா விளையாட்டு அரங்கத்துக்குள்ள உட்கார்ந்து இருந்த புஷ் மாமாவும் அவரோட சேர்ந்து குந்திகிட்டு இருந்த மிச்ச சொச்ச நாட்டு அதிபர்களும் தலைவர்களும் தான்.

விழா ஆரம்பிக்குறதுக்கு கடைசி ஒரு நாள் முன்னாடி விளையாட்டு அரங்கத்த சுத்தி இருந்த வான்வெளிக்குள்ள எந்த விமானங்களும், ஹெலிகாப்டர்களும் பறக்க கூடாதுன்னு அதிபர்களுடைய பாதுகாப்பு அதிகாரிகள் சொல்லிட்டாங்க.

ரெண்டாவது காரணம் அன்னைக்கு பெய்ஜிங்ல இருந்த மூடுபனியும் மப்பும் மந்தாரமா இருந்தா வானமும் தான். பெய்ஜிங்ல பல இடங்கள்ல மழை தூறிட்டு இருந்துச்சு இந்த மாதிரி மிக பெரிய ஒரு வான வேடிக்கையை படம் பிடிக்கணும்னா அதை ஓரமா ஒரு கேமரா வச்சுக்கிட்டு புடிச்சா 4 புள்ளி தான் தெரியும். ஹெலிகாப்டர்'லியோ அல்லது மிக உயரமானா கட்டிடத்துலயோ கேமரா செட் பண்ணி புடிச்சா தான் நம்ம கொஞ்சமாவது டிவில பார்த்து ரசிக்க முடியும். இல்லேன்னா என்னடா 29 புள்ளி கோலம் போடுறாங்கன்னு காமெடி பண்ணிட்டு போய்ட்டே இருப்போம்.

படிச்ச மக்களுக்கு நல்லவே தெரியும் கொஞ்சம் நேரம் மப்பும் மந்தாரமா இருக்குற ,கொஞ்ச நேரம் மழை தூரிட்டு இருக்குறா நேரத்துல ஹெலிகாப்டர்ல பறக்குறதும் அதுல இருந்து படம் புடிக்குறதும் ,அதுவும் அனுமதி இல்லாததுனால விளையாட்டு அரங்கத்துல இருந்தது ரொம்ப தூரம் தள்ளியிருந்து படம் புடிக்குறதும் வீணாப்போன வேலை'ன்னு.


இப்படி ஒரு நெருக்கடியான நேரத்துல அதுவும் கிடைச்ச கொஞ்ச நேரத்துல ஏற்கனவே ஒத்திகை பார்த்து வச்ச பட தொகுப்ப வச்சு கொஞ்சமா கிராபிக்ஸ் வேலை செஞ்சு நம்மள அசர வச்சதுக்கு சீன தொலைக்காட்சிக்கு (CCTV) தான் ஒரு சல்யுட்.


பொறுங்க ..உண்மைல பெய்ஜிங் நகரத்தோட வானம் தெளிவா இருந்த, ஹெலிகாப்டர் பறக்க அனுமதி இருந்த பகுதிகள்ல , பெய்ஜிங்கின் தென் பகுதியில் இருந்து வட பகுதி வரைக்கும் ராட்ச்சசன் நடந்தான்.

இதை எல்லாம் இங்க உள்ளுக்குள்ள குந்திகிட்டு நம்ம சீனாக்கார நண்பர்களோட லைவ் மொழிபெயர்ப்பு பிளஸ் காமன்ட்டரியோட பார்த்ததுனால சொல்றேன்.

மக்களே கொஞ்சமாவது உட்கார்ந்து யோசிங்கப்பா..சும்மா அமெரிக்கா பத்திரிகைக்காரன் சொல்றான்னு வரிஞ்சி கட்டிட்டு வரதீங்க... சீனாக்காரனுக்கு அமேரிக்காகாரன புடிக்காதுன்னு அவனுங்க எல்லாரும் சொல்றத நானும் ஒரு காலத்துல நம்பிட்டு இருந்தேன் இங்க வந்து பார்த்தா தான் தெரியுது, ஒவ்வொரு சீனா குடி மகனுக்கும் புடிச்ச நாடு எதுன்னு கேட்டா மொதல்ல அமெரிக்கா, ரெண்டாவது ஐரோப்பா.அப்பொறம் இந்த செடிக்கு தண்ணி ஊத்துறது, ரோஜாவ மலர வைக்குறது (உண்மைல நினைச்ச நேரத்துல ரோஜாவ மலர வைக்குறானுங்கப்பா ) இதெல்லாம் இங்க நடக்குது. ஆனா அது எல்லாம் செய்ஞ்சு ஒவ்வொரு ஊரையும் எப்படி அழகு படுத்துறாங்ககிறத சொன்னா பாதி பேரு பொட்டிய கட்டிட்டு சீனாவுக்கு ஓடி வந்துருவீங்க

அதேயும் சொல்றேன் அடுத்த பதிவுல

நன்றி :
CCTV
சீனா டெய்லி

Thursday, August 14, 2008

எம்.ஆர்.ராதா - எம்.ஜி.யாரை ஏன் சுட்டேன்?

கொஞ்சம் கூட பயமில்லாத பேச்சு, கொஞ்சம் கூட மக்களை பொய் சொல்லி ஏமாத்தாம உள்ளுக்குள்ள என்ன இருக்கோ ,அதை அப்படியே கொட்டிட்டு , அவ்வளவு தாண்டா நடிகன்னு' சாதரணமா சொல்லிட்டு போய்ட்டே இருக்கார் எம்.ஆர்.ராதா .

வாழ்வுரீதியான அல்லது கலைரீதியான புனிதத்தன்மையை தன் மேல அள்ளி பூசிக்கிட்டு, தலைக்கு பின்னாடி ஒரு ஒளி-ஒலி வட்டத்தோட இருக்கிறா மாதிரி தன்னை தானே நினைச்சிட்டு , தன்னோட பேச்சை கேக்குற மக்களேயும் ஏமாத்தி, தானும் ஏமாந்து , உண்மையில் இருந்து ரொம்ப தூரம் வாழ்ந்துகிட்டு இருக்குற நடிகர்களும் அவர்களை இன்னும் மலை போல நம்பிட்டு இருக்கிற கோடானு கோடி ரசிகர்களும் நிறைஞ்ச பூமி நம்ம தமிழ்நாடு .

இன்னைக்கு தேதில தமிழ்நாட்டு மக்களுக்கு சினிமா, டி.வி தான் உலகம். இதையே பார்த்து இதுல வேலை செய்யிற, நடிக்கிற நடிகனுங்க, அவனுங்க பொண்டாட்டிங்க,நடிகைகள்,அவளுகளோட மாஜி,இந்நாள்,முன்னாள் காதலர்கள,அவன் என்ன சாப்பிட்டான்,என்ன டிரஸ் போட்டான்,என்ன வார்த்தை பேசினான் ,இதையே திருப்பி திருப்பி பேசி வாழ்க்கை சினிமா இல்லைனா சுன்யமாகிடும்'கிற மாதிரி ஒரு பிம்பத்த உருவாக்கிட்டாங்க மீடியாவும் அதை சார்ந்த தொழிலதிபர்களும்.

இதை பத்தி மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய தலைவர்களும் அரசியல்வாதிகளும் படத்துவக்க விழா ,பாட்டு ரிலீஸ் பண்ற விழா ,பைட் பார்க்குற விழா ,தியேட்டரே காலியா ஓடுன ஒரு சூப்பர் படத்தோட 100'வது நாள் விழா , அதுல நடிச்ச (????) வனுங்களுக்கு கேடயம்,கத்தி,மம்பட்டி கொடுக்குற விழா'ன்னு ரொம்பா பிசியா இருக்குறாங்க.

எவனாவது ஒரு நடிகன், "டேய் இப்படி எல்லாம் பண்ணாதீங்கடா , வேலைய பாருங்க முடிஞ்சா வாரத்துக்கு ஒரு தடவை வந்து தியேட்டர்' காசு கொடுத்து டிக்கெட் வாங்கி ஒரு படத்த பார்த்துட்டு போங்க ..வாழ்க்கை அனுபவிக்க, ரசிக்க வேண்டியது எவ்வளவோ இருக்குன்னு " சொல்றானுங்களா ?...எவனுமில்லை .. கேட்டா இது எங்க தொழில் எவ்வளவுக்கு எவ்வளவு மக்கள் எங்க மேல பைத்தியமா இருக்குறாங்களோ அவ்வளவு காசு'ன்னு போய்ட்டே இருப்பானுங்க

கமல்ஹாசன் மட்டும் ஒரு தடவை, அதுவும் மலையாள சேனலோ அல்லது சிங்கப்பூர் சேனலோ அதுல பேசும் பொழுது
"I am afraid that I am working in Cinema, which is not an essential commodity, but just another entertaining media. ஒரு காலத்துல தெருக்கூத்து பிரபல்யமா இருந்து அழிஞ்சது போலா இதுவும் அழிய வாய்ப்பு இருக்கு ' ன்னு சினிமா ஒரு கலை மட்டும் தான் வாழ்க்கை முறை இல்லைன்னு சொன்னார். ஆனா இப்போ அவரும் கூட இந்த வழிபாட்டு மாயை'ல சிக்கிட்டாருன்கிறத அவரோட சமீபத்திய பட துவக்க,பாடல் வெளியீட்டு விழாக்கள் உணர்த்துது .

இது இன்னைக்கு நிலைமைன்னா அந்த காலத்துல இன்னும் நிலைமை மோசமா இருந்து இருக்கு...படத்துல தலைவரா நடிச்ச நடிகர்களையே அப்படியே நிஜத்திலேயும் தலைவர்களா ஏத்துகிட்டு இருக்காங்க மக்கள். தங்களுக்கான தேவ தூதர்கள் பொய்களின் மூலம் பொய் முகங்களின் மூலம் வெளிப்படுரதுன்னான ஒரு கனவு அவர்களோடையது.

இப்படி நடிகனுங்க எல்லாரும்," நான் நல்லவன் ! நான் துறவி! நான் என் வாழ்க்கையவே இந்த சினிமாக்காக அர்ப்பணிச்சு இருக்கேன் ! "இப்படி கூவி கூவி, தன்னோட பொருள விக்காம தன்னை தானே வித்துட்டு இருக்கும் பொழுது...... "என்னாடா நான் கெட்டவன்னு, சொல்றியா ? ஆமாடா, நான் கெட்டவன் தான்! சொல்லிட்டு போடா என் மசிரு "ன்னு போய்ட்டே இருந்துருக்கார் எம்.ஆர்.ராதா

அவரோட இந்த மலேசியா பேச்ச கேட்க்கும் பொழுது

( எம். ஆர். ராதா அவர்களின் பேச்சை கேட்க படத்தை கிளிக்'கவும் )
பெரியாரோட உண்மையான பிம்பமா சினிமா'ல அவர் வாழ்ந்தது தெரியுது . "எம்.ஜி.ஆர ஏன் சுட்டேன், சினிமா நடிகனோட உண்மையான குணம் என்ன, அவங்க பட்ட கஷ்டம், இஸ்லாமிய மதம் பற்றிய அவர் பார்வை, தமிழ் மக்கள் மீதான கோபம், ரசிகன பற்றிய அவர் எண்ணம்'ன்னு பல விசயத்த பத்தி பேசுகிறார்..சாமி'ல இருந்து ஆசாமி வரைக்கும் கிழி கிழி'ன்னு கிழிக்குறார்

இதெல்லாம் கேட்டு முடிச்சதுக்கு அப்பறம், " அடடா! நம்ம காலத்துல எம்.ஆர்.ராதா இல்லாம போய்ட்டாரே!! இருந்து இருந்தா, ஒரு ஆட்டோகிராப் வாங்கி கூட சேர்ந்து போட்டோ எடுத்து இருக்கலாமே, அவருக்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு இருக்கலாமே 'ன்னு உங்களுக்கு தோணிச்சுன்னா நீங்க தாங்க உண்மையான தமிழ் சினிமா ரசிகருங்க.

நன்றி :
சிவாஜி டிவி

Tuesday, August 12, 2008

பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் - சீனாவுக்கு வரவு , நமக்கோ தாறு மாறு செலவு - 1


சீனால ஒலிம்பிக்ஸ் நடக்குது, நீ போறியாடா 'ன்னு நம்ம பசங்க பல பேரு நம்மகிட்ட கேக்குறதும் , நானும் இல்லைடா ,ரொம்ப பிஸி ! வேலை ஜாஸ்த்தி (???) அதுனால போகலே'ன்னு பொய் சொல்றதும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமா நடந்துட்டு இருக்கு.. உண்மையான காரணம் சிகப்பு நோட்டு (பணத்த இந்தியா'ல பச்சை நோட்டு'ன்னு சொன்னா சீனால சிகப்பு நோட்டு'ன்னு சொல்லுவாங்க)

பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ்'ல எதுனா ஒரு விளையாட்டு போட்டிய பார்க்க டிக்கெட் வாங்குறதே பெரிய விஷயம் . நிறைய மேட்டர் இருக்கு இதுல . முதல்ல நடக்குற தகுதி சுற்றுல ஆரம்பிச்சு முதனிலை போட்டிகளுக்கு டிக்கெட் விலை 30 க்வாய்'ல ஆரம்பிச்சு 300 க்வாய் வரைக்கும்; இறுதி சுற்று போட்டிகள பார்க்கணும்னா அதோடா டிக்கெட் விலை 60 க்வாய்'ல ஆரம்பிச்சு 1000 கேவாய் வரைக்கும்; ஒலிம்பிக் தொடக்க விழா சிறப்பு நிகழ்ச்சிகளின் டிக்கெட் விலை குறைஞ்சது 300 க்வாய் விலை ஒசந்தது 5000 க்வாய்; ஒலிம்பிக் இறுதி நாள் நிகழ்ச்சிகளுக்குன்டான டிக்கெட் விலை 150 க்வாய்'ல ஆரம்பிச்சு 3000 க்வாய் வரைக்கும்.

மேல சொன்ன விலை எல்லாம் சீன அரசின் அனுமதி பெற்ற சீன வங்கியின் (பேங்க் ஒப் சீனா ) கிளைகளில் கிடைத்த டிச்கேட்களின் விலை. இது எல்லாம் ஒலிம்பிக்ஸ் ஆரம்பிகுறதுக்கு 6 மாசம் முன்னாடியே வித்து தீர்ந்துருச்சு. இன்டர்நெட்'ல வாங்கினா சர்வீஸ் டக்ஸ், டெலிவரி சார்ஜ் ,அது இதுனு ,போட்டு ஒரு 25% அதிகமா வித்தானுங்க.

இப்போ டிக்கெட் வாங்குறத இருந்தா யானை விலை குதிரை விலை . குறைஞ்சது 1000 க்வாய் இருந்தா தான் softball இல்லை handball maadhiri லொத்த கேம பார்க்கலாம். இதுவே swimming, basket ball மாதிரியான கவர்ச்சியான விளையாட்டுன்னா இன்னும் விலை எகிறும்

இதுக்கு மேலா முக்கியமானா விஷயம் பெய்ஜிங் போயிட்டு வர செலவு ,தங்குற செலவு. போயிட்டு வர எப்படியும் குறைஞ்ச பச்சம் 2000 க்வாய் ஆகும் (ரயில்'ல போனா 1000 க்வாய்'ல முடிஞ்சிடும் ) ஆனா தங்குற செலவு கேட்டாலே கண்ணா கட்டிடும். ஒரு நாள் ரூம் ரேட் சாதாரண சிங்கள் ஸ்டார் ஹோட்டெல்'னா 800 க்வாய். ஆனா அங்க தங்குறதுக்கு platform'ல தூங்கலாம் ... சுமாரான 3 ஸ்டார் 4 ஸ்டார் ஹோட்டெல்'னா 1200-1500 க்வாய்.

மொத்தமா ஒரு 5000-6000 க்வாய் இருந்த ஒரு நாள் போய் ஒலிம்பிக்ஸ்'ச பார்த்துட்டு வரலாம்..ஆணியே புடுங்க தேவை இல்லை அந்த காசு இருந்தா ஒரு 108 தடவ சரக்கு அடிச்சு சந்திர மண்டலத்துக்கே போயிட்டு வரலாம் 42 இன்ச் ஸ்க்ரீன் டிவி'ல பார்த்த எம்புட்டு அழகா தெரியுது ஒலிம்பிக்ஸ்'ன்னு கம்முன்னு இருந்துட்டேன்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஒலிம்பிக்ஸ் காரணமா இங்க சீனால இருக்குற ஊரு கிராமம் சந்து பொந்துல எல்லாம் ஒரே ரவுசு பண்ணிட்டு இருக்கு சீன அரசு.


அதை பத்தி அடுத்த பதிவுல

நன்றி
chinadaily

க்வாய் - சீன கரன்சி ரெமின்பியின் (renminbi) உள்ளூர் பெயர்

1.00 United States Dollars = 6.86399 China Yuan Renminbi

Sunday, August 10, 2008

ரஷ்ய - ஜியார்ஜிய தெற்கு ஒஸ்ஸெதிய போர்


கடந்த நாலு நாளா ரஷ்ய-ஜியார்ஜிய படைகளுக்கு இடையில் கடுமையான யுத்தம் நடந்து கொண்டு இருக்கிறது. என்ன பிரச்சனைனு பார்த்தா சோவியத்து யூனியன்'னில் இருந்து பிரிந்த ஜியார்ஜியா(Georgia)'வில் இருந்து பிரிந்த தெற்கு ஒஸ்ஸெதியா(South Ossetia) தான் காரணம்.

தெற்கு ஒஸ்ஸெதிய பிரிவினைவாதிகளின் கனவெல்லாம் எப்படியாவது அதை ரஷ்யாவுடன் இருக்கும் வடக்கு ஒஸ்ஸெதியாவுடன் சேர்த்து ஒரே ரஷ்ய ஒஸ்ஸெதிய மாகாணமாக ஆகி விடுவது. ஆனால் ஜியார்ஜியா தெற்கு ஒஸ்ஸெதியா எங்களுக்கு சொந்தாமனது, என்ன ஆனாலும் அதை விட மாட்டோம்'ன்னு அங்கு நடந்து கொண்டு இருந்த ஜியார்ஜிய அரசிற்கு எதிரான புரட்சிகளை அடக்கி கொண்டு இருந்தார்கள்.

இப்படி நிலைமை இருக்க தெற்கு ஒஸ்ஸெதிய பிரிவினைவாதிகள் தங்கள் குறிக்கோளின் முதல் கட்டமாக செப்டம்பர் 20, 1990 ஒஸ்ஸெதியாவை தன்னாட்சி பெற்ற குடியரசாக அறிவித்து கொண்டாலும், இன்னும் எந்த உலக அமைப்புகளும் அதை அங்கீகரிக்கவில்லை ரஷ்யாவை தவிர. ரஷ்யா கூட தன்னாட்சியை அங்கீகரித்து உள்ளதே தவிர,அதை ஒரு தனிப்பட்ட நாடாக அங்கீகரிக்கவில்லை. ஜியார்ஜியா இன்னும் ஒஸ்ஸெதியாவை தன் ஆளுகைக்கு உட்பட்ட தன்னாட்சி பிராந்தியமாகவே அங்கீகரித்து உள்ளது.
மேலும் ஜியார்ஜியா சோவியத்து யூனியனிலிருந்து பிரிந்தவுடன் செஞ்ச மொத வேலை அமெரிக்காவுடனான தன் நட்பை மிகவும் பலப்படுத்தி கொண்டது. இப்போ ஜியார்ஜிய படைகள் உபயோகப்படுத்தும் அனைத்து போர் தளவாடங்களும் made in america'னு பச்சைக்குத்தி அனுப்பப்பட்டவை. இது ரஷ்யாவிற்கு ஜியார்ஜியா மீது மிகுந்த கோபத்தையும் நிரந்தர பகையையும் உருவாக்கியது.பதிலுக்கு ரஷ்யா கடந்த காலங்களில் ஒஸ்ஸெதிய பிரிவினைக்கு தனது முழு ஆதரவையும் அளித்து அதன் குடி மக்களுக்கு ரஷ்ய பாஸ்போர்ட் அளித்து ஜியார்ஜியாவின் கடுப்ப கிளப்பி விட்டுருச்சு.

நிலைமை இப்படி நீரு பூத்த நெருப்பாக இருக்க,போன வாரம் ஒஸ்ஸெதிய தன்னாட்சி அரசை ஒரு முடிவுக்கு கொண்டு வர ஜியார்ஜிய படைகள் அதன் தலை நகர் ச்சின்வளி(Tskhinval OR chinvali)'க்குள்ள புகுந்து குண்டு வீசி தாக்குதல் நடத்த ஆரம்பிச்சுருச்சு. அது மட்டும் இல்லை ரஷ்ய அமைதி படை வீரர்களையும் தாக்கி அவுங்கள்ல 12பேர் மரணம், பொது மக்கள்ள 1500 பேரு மரணம்.இது போதாதா ரஷ்யாவ சீண்டி விட, பதிலுக்கு ரஷ்யா ஒஸ்ஸெதியாக்குள்ள புகுந்து ஜியார்ஜிய படைகளை ஒரு வழி பண்ணிட்டு இப்போ ஜியார்ஜியா'க்குள்ள புகுந்து ஒரு முழு யுத்தத்தையே நடத்த நேரம் பார்த்துட்டு இருக்காங்க.

ஒஸ்ஸெதியர்கள் இனத்தால் ஜியார்ஜியா'வில் இருந்து மாறுப்பட்டவர்கள். ரஷ்ய இனத்தை சார்ந்தவர்கள். இதன் காரணமாக ஜியார்ஜிய அரசு அங்கு ஒரு முழு இன அழிப்பை மேற்கத்திய நாடுகளின் துணையோடு நடத்தி கொண்டு இருப்பதாக ரஷ்ய அரசு குற்றம் சொல்கிறது. பதிலுக்கு ஜியார்ஜிய அரசு இது எங்க நாட்டு சொந்த பிரச்சனை , நாங்க இன அழிப்பு எல்லாம் நடத்தலை , பிரிவினைவாதிகளை தான் களை எடுத்து கொண்டு இருக்கிறோம். இதுல எப்படி ரஷ்யா தலையிடலாம்?'னு சொல்லுது.

ஜியார்ஜியா,உக்ரைன் போன்ற நாடுகளின் கனவு நேட்டோ (NATO)மற்றும் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக சேர்வது.ஒஸ்ஸெதியர்கள் நாடோ'வில் ஜியார்ஜியா சேர்வதை மிக கடுமையாக எதிர்த்தவர்கள்.

இந்த போரினால் இது வரைக்கும் 30,000 ஒஸ்ஸெதிய மக்கள் அகதியா ரஷ்யாவிற்குள் வந்து இருக்காங்க.மேலும் 2000 த்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததாக செய்தி.

இதுல கடைசில லாபம் யாருக்குன்னு பார்த்தா அமெரிக்கா'வுக்கு தான். ஜியார்ஜியா,உக்ரைன், போன்ற சோவியத்து யூனியனிலிருந்து பிரிஞ்ச நாடுகளுக்கு எல்லாம் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதில் முதல் இடம் புடிப்பது அமெரிக்கா தான்.மேலும் ஜியார்ஜியா எண்ணெய் வளம் மிக்க நாடு . கருங்கடலின் ஓரத்தில் இருக்கும் அதை யார் கட்டுக்குள் வைப்பது அமெரிக்கா ரஷ்யா இரண்டிற்கும் ஆளுமை சார்ந்த ஒரு முக்கியத்துவம் கிடைக்கும்.

எனவே இந்த போர் கல்லறை கட்டப்பட்டு விட்டதாக எண்ணிய பனிப்போர் வெளிப்படையாக மீண்டும் துளிர் விட்டு இருப்பதின் அறிகுறி.

கடைசியாக வந்த செய்திகளின் ஜியார்ஜியா படி போர் நிறுத்தத்தை அறிவித்து , ரஷ்யாவுடன் தெற்கு ஒஸ்ஸெதிய சம்பந்தமாக நிரந்தர சமாதான உடன்படிக்கை ஏற்பட முயற்சி செய்து கொண்டு இருக்கிறது.

சம்பந்தப்பட்ட செய்திகள்
1.
Georgia - OCHA report
2.Institute for War and Peace Reporting.
3.Washington post - Georgia retreats.


Friday, August 8, 2008

கமல்- மர்மயோகி, மருதநாயகம் அதன் பின்விளைவுகள்


கமல் கொஞ்சம் அழகா தான் தெரியுறாரு .
கொஞ்சம் GLADIATOR' Russell crowe மாதிரி இருந்தாலும் ,அவரோட கவசத்துலவரைஞ்ச்சிருக்குற படங்கள்ல ஒரு இந்திய சாயல், கையில கட்டிருக்குற ARM Guard ' ஒரு விதமெனக்கெடல் இருக்கு.

சிலர் மர்மயோகி தூசி தட்டப்பட்ட மருதநாயகம்'னு சொல்றாங்க!!!
சிலர், மர்மயோகி 7 ஆம் நூற்றாண்டு கதை, ஆனா மருதநாயகம் 18 ஆம் நூற்றாண்டுகதை;மர்மயோகி மருதநாயகத்துக்கான இரண்டாவது பெரிய முன்னோட்டம் ( முதல் சிறுமுன்னோட்டம் தசாவதாரத்தின் முதல் 15 நிமிட காட்சிகள் ).

தசாவதாரத்தின் மூலம் 60 கோடிக்கு படம் எடுத்து 100 கோடி வரை அதை வியாபாரபடுத்த முடியும்'னு ஒரு தன்னம்பிக்கையோட இருக்குறாரு கமல்.
இப்போ மர்மயோகி அதன் இரண்டாவது படி. படத்தோட பட்ஜெட் 100 கோடி'னு (!!!) பேச்சு.
அதுவும் மட்டும் இல்லாம walt disney இந்த படத்தோட production மூலமா இந்திய - தமிழ் சினிமா மார்கெட்டுக்குள்ள நுழையுறாங்க.

இதன் மூலமா கமலுக்கு கிடைக்கும் ஆதாயங்கள்

அவரோட கனவு படமான மருதநாயகம் எடுப்பதற்கு தேவையான பண, படை பலம் கொஞ்சம் சுலபமாக , இதை போன்ற ஹாலிவுட் நிறுவனங்களின் தொடர்பு உதவும்.
கமலுடைய ரீச் (reach) இந்திய, தமிழர்கள் வாழும் நாடுகளின் எல்லைகளில் இருந்து இன்னும் பல நாடுகளுக்கு விரிவடையும்.
அவருடைய நிறைய சினிமா கனவுகள் நிஜமாக்கப்படும்.


நமக்கு ( சினிமா ரசிகனுக்கு ) -
நிறைய நல்ல படங்கள் நல்ல தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்படும்.
தமிழர்களின் கலாச்சார அடையாளமாக மாறி விட்ட தமிழ் சினிமா, உலகின் பல்வேறு மூலைகளில்அறியப்படும்.
புதிய முயற்சிகள் வரவேற்க பட்டு நல்ல திரைப்படங்கள் கிடைக்கும்.
தமிழ் சினிமா'வின் புரையோடி போன கதைகளை எடுக்க தனிப்பட தயாரிப்பாளர்கள் (Individual producers ) யோசிப்பார்கள். அதே நேரம் பிரமிட் சாய்மீரா , walt disney , ரிலையன்ஸ் அட்லாப்ஸ் போன்ற கார்ப்பொரேட் நிறுவனங்கள் சினிமா தயாரிப்பை முறை படுத்தி வகைபடுத்தும்

பாதிப்பு

என்ன ஒன்னு, எப்படி சிறு விவசாயிகள் எல்லாம் உலக மயமாக்கலின் மூலம் காணாமல் போனார்களோ, அதே போன்று சிறு பட தயாரிப்பாளர்கள், கந்து வட்டி மீட்டர் வட்டிபைனான்சியர்கள் ,தியேட்டரில் முறுக்கு சோடா விற்பவர்கள் ,கடை போட்டு இருப்பவர்கள் , ஊரோர டென்ட் கொட்டகைகள் , எல்லாம் காணமல் போகும் .

தியேட்டரின் டிக்கெட் விலையும் 100 ரூபாயில் இருந்து தொடங்கும். இதெல்லாம் தவிர்க்கமுடியாத ஒன்று.

கடைசியாக கமலுக்கு ஒரு வேண்டுகோள்.

தயவு செய்து தசாவதாரம் போல் 10 வேடம் எல்லாம் மர்மயோகி'யில் வேண்டாம்.
தங்களுடைய அழகான முகத்தையும் நடிப்பையும் நம்பி மட்டுமே நாங்கள் படம் பார்க்கவருவோம்.மனதை தொடும் ஒரு கதை அல்லது சம்பவங்களின் தொகுப்புடன் மர்மயோகி'யில் எங்களை சந்திப்பீர் என்று நம்பிக்கையுடன் காத்து கொண்டு இருக்கிறோம்.

மர்மயோகி பற்றிய செய்தி இங்கே கிளிக்கவும்

Monday, August 4, 2008

ரஜினிக்கு மற்றுமொரு குதிரை - குசேலன்


ஸ்டைல் மன்னன் திருப்பியும் விழுந்து இருக்காரு , ஆனா இவரு சொன்ன படி ' இவரு யானை இல்லை, குதிரை திரும்ப எழுந்து ஓட ஆரம்பிச்சுருவரு ....

ரோபோட் - ஷங்கர் இன்னும் கொஞ்சம் அதிகமா டெக்னாலஜி'ய தாரை வார்க்க Assistant Directorsச எல்லாம் இந்நேரம் பெண்டு நிமித்திட்டு இருப்பாரு

எதுக்காக வேண்டி ரஜினி இந்த மாதிரி ஒரு படம் பண்ணனும்???


ரஜினிக்காக வேண்டியே கதை எழுத 100 பேரு ரெடியா இருக்காங்க ....சும்மா நாலு பாட்டு, கொஞ்சம் காமெடி ,நிறைய ஸ்டைல்'னு விட்டாலே 100 நாள் தாராளமா ஓடும் படம் .

அப்புறம் எதுக்கு ஒரு நல்ல கிளாசிக்கான மலையாள கதைய எடுத்து ,அதுக்கு மசாலா எல்லாம் தடவி 'ஒரு மொக்க' படத்த எடுத்து மக்கள நோவடிக்கணும்.

சிவாஜி'ல எல்லாம் என்ன எளவு இருந்துச்சு??? கதையும் கிடையாது, ஒரு புடலங்காயும் கிடையாது.... "சும்மா ஊருக்கே நல்லது செய்ற ஹீரோ, வில்லன் ஏமாத்துராறு , அப்புறம் ஹீரோ திரும்ப வந்து வில்லன வெளுத்துகட்டுறாரு "
இது அரத காலத்து பழைய கதை. இதுக்கே கொஞ்சம் கிராபிக்ஸ் , டெக்னாலஜி அது இதுன்னு போட்டு திரைக்கதையா நல்ல ஸ்டைல் சீன்ஸ் 4 வச்சு ஹிட் படம் ஆக்குனாங்க.

ஆனா ஒன்னு கமல் கொஞ்சமும் கவலை பட தேவை இல்லை...திரும்ப தமிழ்ல ஒரு நல்ல படம் வர இன்னும் 3 மாசமாவது ஆகும் ..அது வரைக்கும் தசாவதாரம் வசூலுக்கு குறைச்சல் இல்லை.


ரஜினி'ங்குற குதிரை அடுத்த ரேஸ்'ல (சுல்த்தான் , ரோபோட் ) நல்ல ஓடும்னு எதிர்பார்ப்போம்


நன்றி - http://cinematoons.blogspot.com

Friday, August 1, 2008

வெள்ளிக்கிழம ராமசாமி

மொத மொதலா தமிழ்ல பதிவு தொடங்கி இருக்க ...இன்னைக்கு வெள்ளிக்கிழம நல்ல நாளு, இன்னைக்கே எதுனா எழுதி போஸ்ட் பண்ணிடு ,ரொம்ப மங்களகரமா இருக்கும் ..அப்படின்னு உள்ளுரா ஒரு பீலிங்க்ஸ்...

நம்ம தான் எப்பயிமே 'follow your ஹார்ட் -அது எங்க கொண்டு போகுதோ ,முட்டு சந்தோ, புளியந்தோப்போ' ன்னு போய்க்கினே இரு ' - பார்ட்டி ஆச்சே..செரின்னு வெள்ளிகிழம சாயங்காலம் ஆனாலும் பரவ இல்லைன்னு சொல்லிட்டு புது போஸ்டுக்கு என்ன மேட்டர்'ல எழுதலாம்னு கம்ப்யுட்ட்ற உத்து உத்து பார்த்துட்டு யோசிச்சிட்டு இருந்தேன்

'டேய் என்னடா மணி 8 ஆகுது , இன்னைக்கு வெள்ளி கிழம வேற, என்ன பண்ற கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து அதுவும் மானிட்டர ஆப் பண்ணிட்டு ' ..(அடங்க...சொல்ல கூடாதா , என்னடா ஒரே இருட்டா இருக்கேன்னு பார்த்தேன் ).... கேட்டது நம்ம 'வெள்ளிகிழம ராமசாமி' சார் .இவருக்கு இந்த பேரு எப்படி வந்துதுனா அப்பால என்னைக்காவது ஒரு நாள் பார்ப்போம். அதுக்கு முன்னாடி எங்களுக்கு வெள்ளி கிழமை, சனி கிழமை முக்கியமா இராத்ரிகள்ள ஏற்படுற பல வித திகில்-பிகில் அனுபவங்களுக்கு இவரு தான் மூலக்காரணம் :) (ரூட் காஸ் )'

சரி அண்ணன் சொல்லிட்டாறேய்ந்னு நானும் செட்டியாரும் கிளம்பினோம்....

எங்கெனே போகலாம் இன்னைக்கு?

"இன்னைக்கு என்ன நாள் ? என்ன கேள்வி இது ? வெள்ளிக்கிழமை ஆனா நம்ம பீர் ஊத்தாம இருந்த குலதெய்வ குத்தமாகிடும் "அப்படினு நம்ம ராமசாமி அண்ணன் கவுண்டர் ரேன்ச்சுக்கு ட்யலாக்க விட, செட்டியாரும் ஆமாப்ப இன்னைக்கெல்லாம் ஒரே Heattu' பாடிய கொஞ்சம் கூல் பண்ணனும் பா' அப்படிங்க , செரி 'எல்லாரும் இன்புற்று இருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே'னு நானும் அப்பொறமா ப்ளொக்'கிகாலம்னு கிளம்பினேன்

வழக்கமா போற queens பாரே போகலாம்னு 8.30 மணிக்கு முடிவு பண்ணி ஒன்பது மணிக்கு டாக்ஸ்சில ஏறினோம் (இதுக்கு இடைல ராமசாமி அண்ணன் வீட்ல போயி புல் பாடி ஷவெர் எடுத்து ,ஹேர் ஜெல், பாடி ஜெல் ,பர்ப்யும், எல்லாத்தேயும் கொட்டி கவுத்தி கொஞ்சம் உடம்புலேயும் பூசிக்கின்னு , செட்டியாரு வீட்ல போயி அம்மணி கிட்ட (அவரு அம்மணி கிட்ட) பெர்மிஷன் லெட்டர் எல்ல்லாம் எழுதி பெர்மிஷன் வாங்கிகின்னாரு )

பாரே ஒரே அமளி துமளியா இருந்துச்சு , ஏதோ உள்ளூர் கவுன்சிலருக்கு பிறந்த நாள் போல (அவுங்க இது படி லோக்கல் கம்யுனிஸ்ட் பார்ட்டி தலைவர் தான் லோக்கல் கவுன்சிலர் , பஞ்சாயத்து தலைவரு, வார்டு செயலாளரு எல்லாம்) எல்லாருக்கும் ஒரு ரவுன்டு TEQUILLA ஃபிரியா ஊத்திட்டு இருந்தாரு.

ஆகா ! ஆரம்பமே TEQUILLAவா, இன்னைக்கு விளங்குச்சுரா சாமின்னுட்டு கபக்குன்னு எடுத்து ஒரே மொடக்கா முழுங்கினோம் . கம்மினாட்டிங்க TEQUILLA கொடுத்தவனுங்க சால்ட் வைக்காம போயிட்டானுங்க . ராமசாமி அண்ணன் TEQUILLA எரிச்சல் தாங்காம நம்ம ஊரு டாஸ்மாக் ஞாயபகத்துல பக்கத்துலே இருந்த ப்ளேட்ல இருந்து கொஞ்ச சால்ட்ட எடுத்து நக்கிடார்று . எனக்கு அந்த பக்கம் இருந்த செட்டியாரு அப்படியே ஸ்லோவ் மோஷன்ல அங்க கைய கொண்டு போய்ட்டு சால்ட் மேல வச்சவுடன "கிண்கிணி மிங்கினி " ன்னு கிளு கிளுனு ஒரு சிரிப்பொலி

நிமிர்ந்து பார்த்தா ரெண்டு அழகிகள் (ஒரே போதை'பா ) ...ராமசாமி அண்ணன பார்த்து ஒரே சிரிப்பு ,அண்ணனும் ஸ்டைலா ஒரு காந்த பார்வைய அவுங்க மேல செலுத்தினாறு , செட்டியாரு தாவி முன்னாடி வந்து ஹாய்' ன்னாரு

கொஞ்ச நேரத்து 9 TEQUILLAவோட ஊரு ,பேரு, வேலை, ஓலை, வூடு ,வாசல் விவரம் எல்லாம் பேசி முடிச்சோம் அவளுகளோட , ரெண்டு அழகிகளும் திக்கி திக்கி திணறி பேசினாலுக ,ஒண்ணு சீனா,ஒண்ணு பிலிப்பைன்ஸ்...

ராமசாமி அண்ணன் திடீர்னு, "என்னப்பா நம்ம நாட்ல மட்டும் இவ்ளோ லஞ்சம் ,ஊழல், கூதல்னு ஆரம்பிச்சாரு...கூடவே செட்டியாரும் இந்தியன் கிரிமினல், பைனான்சியல், எகனாமிகல்,ஜியாமெட்றிகல்,லா (law)' என்ன என்ன சொல்லிருக்கு, அதுல எவ்வளவு ஒட்டைங்க, அதை எப்படி ஒட்டு போடுறதுன்னு ஆ'ரம்'பிச்சுட்டாரு ...

இதுக்கு இடைலா அந்த ரெண்டு அழகிகளும் டான்ஸ் ப்ளோருக்கு போயி ஒரே குத்தாட்டமா போட ஆரம்பிச்சுட்டாளுங்க . நம்மக்கு அதுவா முக்கியம் , எப்படியாவது இன்னைக்கு நைட்டுக்குள்ள பேசி இந்தியாவ திருத்திரதுன்னு நாங்க பயங்கர டிஷ்கஸன்ல இருந்தோம்.

நல்லா போதை ஆக வேண்டிய நேரத்துல கண்டத பேசி 3 பேருக்கும் போதை இறங்கிருச்சு ....இன்னும் 6 TEQUILLA ஓடிருச்சு...அப்பொறம் நம்மள பத்தி கேக்கனுமா ?, என்னமோ நம்ம தான் புரட்சி கலைஞருக்கு அடுத்தாப்புலே புள்ளி விபர ராசா மாதிரி, புள்ளி-சில்லி விவரத்தோட இந்தியா எப்படி திருந்தவே திருந்தாதுனு அடுக்கிட்டே இருந்தேன் ...பார் கலர் லைட் எல்லாம் வெள்ளை வெள்ளையா தெரியா ஆரம்பிச்சுது.. ஐயோ ! போதை இறங்குது போலா'ன்னு அண்ணன் இன்னும் TEQUILLA சொல்லுவுமானு இந்த பக்கம் கைய போட்டா காத்துல நிக்குது கையி , அந்த பக்கம் செட்டியாரே' ன்னு கைய போட்டா சேர்' உட்காருது கையி ...

செரி உச்சா போயி இருப்பாங்கன்னு bartender'ட TEQUILA சொல்லலாம்'னு அவன கூப்பிட்டா அவன் 'sir ur friends have already ordered drinks for you' னான். சே! எவ்ளோ நல்லவங்க அவுங்கன்னு, அவன்ட்ட எப்பொ order பண்ணினாங்'கன்னு கேட்டா , "they went for dancing 15 mins Back and asked to give 3 TEQUILLA shots to you'னு சொன்னான். அடங்கொய்யால, அப்போ இவ்ளோ நேரம் தனியாவ பேசிட்டு இருந்தேன்னு மனசுல்ல குமுரிட்டே , DANCE FLOORஎ கொஞ்சம் எட்டி பார்த்தா , "செட்டியாரு சீனா காரியா வச்சு சல்சா ஆடிட்டு இருக்காரு, ராமசாமி அண்ணே பிலிப்பைன்ஸ்காரியோடா ஜல்சா பண்ணிட்டு இருக்காரு".....

மனசுக்குல ஒரு "அடங்கொக்காமக்கா"


செரினு ஒரு 20 மினிட்ஸ்ல இன்னும் 2 TEQUILLA'வ உள்ள தள்ளிட்டு போலம்மாணே'னு ரெண்டு பேருக்கும் MSG அனுப்பிச்சா "SEE YOU TOMORROW " ஒரு ரிப்லே வருது

உனக்கு இது தேவைடா மகராசு'னு வெளிய வந்து TAXI'அ புடிச்சு பக்கத்து வீட்டு கதவை எல்லாம் தட்டி, தடுமாரி, வீடு மாறி, மொள்ளமாறி'ன்னு திட்டு எல்லாம் வாங்கி ஒரு வழியா வீடு வந்து தூங்கிப்பொட்டென்.

கனவுல எல்லாம் இந்த பொழப்புக்கு பேசாம "இந்தியாவின் இறையாண்மையும் அமெரிக்காவின் பேராண்மையும்'னு ஒரு கட்டுரையோ, "வாழாத வாழ்க்கையின் பெருவெலியின் ஒரத்தில் நின்று எச்சி துப்பிய வாழவந்தானு" ஒரு கவிதையோ எழுதி மொதப்பதிவ பொட்டு இருக்கலாம்'ம்னு அசரிரீ.

பி.கு
பிலிப்பைன்ஸ்காரி ராமசாமி அண்ணனொட வீக் என்ட் டேட்டிங் லிஸ்ட்'ல சேர்ந்துட்டா.

வீட்டுக்கு 3.30 மணிக்கு வந்த செட்டியாரு TEQUILLA சூடு தாங்க முடியாம பாத்ரூம்குள்ள போனவரூ 6.00 மணி வரைக்கும் உள்ளேயே வூடு கட்டி கும்மி அடிச்சிட்டு இருந்துருக்காரு.

அடுத்தா நாள் சாயங்காலம் 7 மணிக்கு கங் ஒவெர் தலைவலிக்காக திரும்பவும் அதே பார்ருக்கு நான் போக உள்ளெ வேற எதோ ஒரு கவுன்சிலருக்கு பொறந்த நாளுனு ஓசி ரம்மு .... சாமி ஆள விடுங்கப்பானு ஓடி வந்துட்டேன்.

 

| இங்கிலீஷ்'ல |