திரும்ப ஹே-ராமிற்குஇப்படியாகத் தொடர்கிறது இந்த பலி விளையாட்டு,காளிக்கும், அல்லாஹ்வுக்கும் ஏற்பட்ட இந்த மாய ரத்த பசி தீரும் வரை தாராளமாக பலி கொடுக்கின்றனர் மக்கள், அடுத்தவர் உயிர்களையும் , குழந்தைகளையும், பெண்களையும், வழமையாக கொடுக்கும் மிருகங்களுடன் சேர்த்து.
சில மணி நேரங்கள் ராமன் ராவணன் ஆகிறான், மன சாந்திக்காக கொஞ்சக் கொலைகள் , பித்தத்தில் கொஞ்சக் கொலைகள் செய்து . பின்னாளில் எவ்வளவு முயன்றும் அவனால் இந்த நினைவுகளில் இருந்து தப்ப இயலவில்லை. காரணம் ராமன் ஒரு நடுத்தர மனிதன்,அவன் காசுக்காக கொலை செய்யும் அன்றாடங்காச்சியோ, அல்லது குல சுத்தத்துக்காகவும், கொள்கைக்காகவும் கொலை செய்யும் மதவாதியோ இல்லை. எந்நாளும் அன்பை பொழியும் குடும்பமும் , காதல் தரும் ஆதர்ச மனைவியும் அமைந்தும் கூட இந்த பழியும், உணர்வும் முக்கி எடுத்த அமிலக்கரை போல அவனை விட்டு அழிய மறுக்கின்றது.
பலியும் அவனே! பலி கொடுக்கபட்டவனும் அவனே !குஜராத்திலும் , காஷ்மீரிலும் ,ஈராக்கிலும், பாலஸ்த்தீனத்திலும் , பாகிஸ்தானிலும், மியன்மாரிலும், ஆப்பிரிக்காவின் அனேகமாக அனைத்து தேசங்களிலும், லட்சோப லட்சம் ராமன்கள் வாழ்வின் மன அமைதியை தொலைத்து விட்டு, திரும்ப இயலாத பாழ் இருவெளிக்குள், கொலை கூச்சல்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு இதை விட்டுத் திரும்ப வாய்ப்பும் இல்லை, அன்பையும், காதலையும் தர குடும்பமும், மைதிலியும் இல்லை...அவர்களின் தலைவர்கள் அவர்களுக்கு வாக்களித்த அவர்களின் ஒரே விடுதலை திரும்ப இந்த கொடூர நிலையிலும், தொடரும் உயிர் பலியிலும் தான் உள்ளது.
இந்த கொலைக்களங்களும் பிற இனத்தை அளிக்கும் பரிசோதனைக் கூடங்களும் பூமிக்கு ஒன்றும் புதிதல்ல. எத்தானையோ முறை இப்படி இந்த பலி நிகழ்ந்து இருக்கிறது வரலாற்றில் ..எத்தானையோ முறை லட்சகணக்கான முஸ்லிம்கள், யூதர்கள்,கிருத்தவர்கள்,ஹிந்துக்கள் என்று அடையாளம் பூசப்பட்ட மக்களின் உய்ரிகள் உடைமைகள் அழிக்கப்பட்டன ..
பலி தான் அதிகமாகியதேத்தவிர, பலி கேட்ட கடவுள்களின் தாகமோ, பசியோ அடங்க வில்லை.சரி இந்த கொலைகாரக் கடவுள்களை விட்டு விடுவோம் .அப்படியாவது இந்த பலி நிற்கட்டும் என்று பார்த்தால் கிளம்பி கொண்டு வந்து நிற்கின்றன வர்க்க பேதங்கள்.
பன்னாட்டு முதலாளித்துவம் ஏழைகளின் குருதியில் கிடைக்கும் போதையை, லாபத்தை விட தயாரில்லை.ஏழைகளும், தன்னுடைய உரிமையை முழுவதுமாக விட்டு கொடுக்க போவதில்லை. பணக்கார இனத்திற்கும், அதன் நிரந்தர லாப மூட்டையும் பகையுமான அடித்தட்டு இனத்திற்கும் நில்லாத , ஓயாத சண்டை உலகின் மூளை முடுக்குகளில் எல்லாம்.
ஒரு இன அல்லது வர்க்க மக்களை அழிப்பதன் மூலம் ,சுத்தமான ஒரு சமுதாயத்தை படைத்து விட முடியும் அல்லது, அவர்களை அடிமைகளாக்கி நிச்சயமான ஒரு ஆதிக்கத்தை அடைந்து விட முடியும் என்று நினைப்பவர்கள் மடையர்கள்.
இந்த இனம் அழிந்தால் இன்னொரு இனம் வரும் போராட, இந்த மதம் அழிந்தால் இன்னொரு மதம் வரும் எதிர்க்க, இந்த வர்க்கம் அழிந்தால் இன்னொரு வர்க்கம் வரும் சண்டைக்கு , இது உலகம் தோன்றியது முதல் நடந்து கொண்டு இருக்கும் ஒரு தொடர் விளையாட்டு.உன்னுடைய மதத்தில் , இனத்தில்,குழுவில், வர்க்கத்தில் இருந்தே வருவார்கள் எதிர்ப்பாளர்கள்
முந்தைய அல்லாத மற்ற மதத்தை விட கடுமையாக எதிர்ப்பார்கள் உன்னை.
என்ன செய்ய முடியும் உன்னால்?
ஆதி காலத்தில் எத்தனை மதங்கள், எத்தனை பேதங்கள் இருந்தன?. பழைய மதத்தின் உள்ளுக்குள் இருந்தே பிரிந்து வளர்ந்து வந்தது தான் அத்தனை புதிய மதங்களும்.
இப்படி வந்த எல்லா மதவாதிகளும் சொல்லி வைத்தாற்போல் கேட்பது பலி .
ஏன் இந்த பலி ? மாறுபட்ட மதங்கள் தான் பலி கொடுக்க தூண்டுபவர்களின் பிரச்சனையா ? இது எப்படியென்றால் உன்னுடைய வீட்டில் பிறக்கும் உன் சகோதரன் , உன் வீட்டில் கொடுக்கும் சைவ உணவினை ஆண்டாண்டு காலமாக உண்டு வளர்ந்து, பின்னாளில் வேற ஒரு புது வீட்டிற்கு போய் தனது காதலியுடன் ,கறி சோறு தின்று கொண்டு இருந்தால் அது பாவம் என்று அதற்க்காக அவனைக் கொலை செய்து தீர்வு காண்பதை போன்றது .
நாளை உன் மகன் அதே தவறை செய்ய மாட்டான் என்று என்ன நிச்சயம் ?மதம் மாறுவது முழுக்கத் தவறு என்பது முட்டாள்த்தனம். உனக்கு பிடித்த இனிப்பு எனக்கு பிடிக்காது, எனக்கு பிடித்த புளிப்பு உனக்கு பிடிக்காது. அதுவும் இன்று தான் நாளை இந்த பிடித்தல் கூட மாறும் அது போலத்தான் மத மாற்றமும். அது மனதால், அறிவால் ஏற்படுதல் நலம் . காசுக்காகவும் பயத்திற்க்காகவும் மதம் மாற்ற பட்டால் ,அதன் மூல மதம் மாற்றுபவன் அடைவது என்ன? தன் மதத்திற்கு எண்ணிக்கை கூடுமே தவிர, இந்த மாதிரி கொள்கை அற்று மதம் மாறுபவர்களால் ஒன்றும் யானை பலம் வரப்போவது இல்லை. வரப்போவது எல்லாம் யானை விட்ட குசுவிற்கு சமானம். கொஞ்சம் நேரம் நீடிக்கும், அதுவும் கெட்ட வாசம் தான்.
சிந்தித்து பார்த்தால் எந்த கொள்கையும் வந்து எவனுக்கும் சோறு போட போவதில்லை.உழைப்பை தவிர! வேண்டுமானால் கூலிக்கு மாரடிப்பவர்களுக்குக் கொஞ்சம் காசு கிடைக்கலாம் ,ஆனால் அதுவும் நிலை இல்லாத ,நிம்மதி இல்லாத காசு. வட சென்னையின் குப்பத்து மக்களுக்கு தெரியும் நிம்மதியான காசின் அருமை.
இப்படி ஒரு வருமானத்தை தன்னுடைய மக்களுக்கு அளிப்பது அரசாங்கத்தின் கடமை
அப்படி அது தவறும் பட்சத்திலேயே கடவுள்களும் மிருகங்களும் பசியால் முழித்து கொண்டு பலி கேட்கின்றன